படம் பின்னர் வெளியிடப்படும்.
அமரர் திரு மூ.இராமகிருஷ்ணன் ,
உணவைச் சமைத்து உண்ணாதீர்; நோயில் சிதைந்து மாளாதீர்.
உலக நல்வாழ்வு இயக்கம்
சிவசைலம்
(வழி) ஆழ்வார்குறிச்சி - 627 412
நெல்லை மாவட்டம்.
இருபத்தைந்து ஆண்டு காலமாய் இயற்கை உணவு உண்டு நாடி வருவோர் தமக்கு இயற்கை மருத்துவம் அளித்து அனைத்து நோய்களையும் குணப்படுத்தி வரும் அற்புத மனிதர் மு.ராமகிருட்டிணன், தலைவர், உலக நல்வாழ்வு இயக்கம்.
தீயன அகற்றுமின் !
- உயிருள்ள உணவுப் பொருட்களைச் சமைத்து உண்ணாதீர்கள் ! சமைத்த உணவுகள், நம்மை மெதுவாகக் கொள்ளும் பின நஞ்சுகள். அவற்றை அறவே அகற்றுங்கள்.
- உப்பை உண்ணாதீர் ! அது நம உடம்பை அரித்துக் கொல்லும் ஒரு கூடு நஞ்சு.
- காபி குடியாதீர் ! அது நம்மைக் கெடுக்கும் ஒரு கா ஃ பின் நஞ்சு.
- தேநீர் பருகாதீர் ! அது நம்மைத் தீய்த்துக் கொல்லும் ஒரு நிக்கோடின் நஞ்சு.
- ''சோடா' (இப்போது கோக்) போன்ற செயற்கை சுவை பானங்களை எவற்றையும் பருகாதீர்; அவை நம்மைச் சிதைக்கும் குடி கேடுகள் !
- மது வகை எவையும் பருகாதீர் ! அவை நம்மை மயக்கி கொல்லும் போதை நஞ்சுகள்.
- புலால் உண்ணாதீர் ! பிணப் பொருளான அது நம்மை விரைந்து பிணமாக்கும் ஒரு யூரியா நஞ்சு !
- மூக்குப் பொடி போடாதீர் ! அது நமது மூச்சு உறுப்புக்களை பாழாக்கும் ஒரு புகையிலை நஞ்சு.
- புகை பிடியாதீர் ! அவை நம்மை விரைவில் சுடுகாட்டில் புதைத்து விடும் நஞ்சு ஓட்டிகள்.
- புகையிலை மெல்லாதீர் ! அது வாயையும் குடலையும் நாசமாக்கும் ஒரு நச்சு பொருள்.
- வெற்றிலை போடாதீர் ! அதில் கலக்கும் சுண்ணாம்பு வயிற்றுப் புண்ணை உண்டாக்கி நம்மை வாட்டி வதைக்கும்.
- கண் மை பூசாதீர் ! அதன் வேதியியல் நஞ்சு கண்களைச் சிதைக்கும்.
- முகத் தூள் (முகப் பவுடர்) பூசாதீர் ! பாறைத் தூளாம் அது நம் முகத்தைப் பாழாக்கும் வீண் பொருள்.
- செயற்கை பற்பொடி, பற்பசை கொண்டு பல் துலக்காதீர்கள் ! அவற்றின் வேதியியல் பொருள்கள் பற்களையும் ஈறுகளையும் பாழாக்கும் ! இயற்கை உணவே பற்களைத் தூய்மைப் படுத்தும்.
- எண்ணெய் பூசாதீர் ! வியர்வைத்துளை அடைபட்டு தூசி படிந்து தலையும், தோலும் பாழாகும்.
- எண்ணெய் தேய்த்துக் குளியாதீர் ! கொழுப்பு உணவுப் பொருளாம் அதனை உடலில் தேய்த்து, அதைப் பாழாக்குவதோடு கூட, தோலையும், நீரையும் மாசடையச் செய்யாதீர்.
- சோப்பு போட்டுக் குளியாதீர் ! அதில் உள்ள வேதிப் பொருட்கள் நம் தோலைச் சிதைத்து வதைக்கும் !
- வெந்நீரில் குளியாதீர் ! அது நம் தொலையும், நரம்புகளையும், குருத்தி குழாய்களையும் விரித்துச், சுருக்கிச் சிதைக்கும்.
- விந்து விடாதீர்கள் ! உயிரூட்டம் அளிக்கும் அதனைப் பாழ் படுத்தினால் உடலும், உள்ளமும் நொந்து கெடுவது உறுதி !
- நகைகளைச் சுமக்காதீர் ! அவை திருடர்களை கூவி அழைத்து, நம்மைக் கொலை புரியத் தூண்டுவனவாம்.
- பனியன் அணியாதீர் ! சட்டையைக் காப்பதாகக் கூறிக் கொண்டு, அது நம் தோலை அழுத்தி, வியர்வை நஞ்சினால் கெடுக்கும்.
- தியேட்டரில் திரைப்படம் (தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை) காணுதல் செய்யாதீர். அது கண்களைக் கெடுக்கும், உள்ளத்தை கறைபடியச் செய்யும். உடலும் ஊறுபடும்.
- மசாலாப் பொருட்கள் வேண்டாம் ! அவை நம் செரிமான உறுப்புகளைச் சிதைத்து நம்மை விரைவில் மயானத்துக்குக் கொண்டு செல்லும்.
- வெந்நீர் பருகாதீர் ! உயிர்க்காற்று (ஆக்சிஜன்) நீங்கிய அது நம்மை நாளடைவில் சிதைக்கும் புன்னீர் அது.
- வீண் சொல் பகரேல் ! வீண் பகையும், கால விரையமும் விளையும்.
- பட்டு முதலான விலை மிக்க துணிகளை உடுத்தாதீர் ! காற்றுப் புகா நிலையால் உடலும் உள்ளமும் நலியும்.
- ஆடம்பர வாழ்வை அகற்றுங்கள் ! அவை நம்மை வறுமை குழியில் வீழ்த்தி அழிக்கும்.
- மின் விசிறி நமக்குத் தூய காற்றை நல்குமா? இல்லை. நமைச் சுற்றிய நச்சுக் காற்றையே சுழல்விக்கும்.
- செயற்கை ஒளியில் கண் மிக விழியாதீர் ! அவ்வொளி, நம் கண்களைக் கெடுத்து, கண்ணாடி சுமக்கும் நிலையில் ஆழ்த்திவிடும்.
- சிமென்ட் தரை கொண்ட இல்லங்கள் ஏற்ற வாழ்விடங்கள் ஆகா! அவை கதிரவன் வீசும் நச்சுக் கதிர்களை உறிஞ்சி, நம மீது பாய்ச்சி நம்மை நலிவுறச் செய்யும்.
- இரும்பு நாற்காலி, இரும்புக் கட்டில் ஆகியன வேண்டா ! அவை நம் உயிர் வெப்பத்தை ஈர்த்து நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
- நச்சு தூசி மிக்க நகர வாழ்க்கை ஏற்றதன்று. நறுங் காற்று உலவும் நாட்டுப் புலமே நண்ணுவீர் !
- குளோரின் கலந்த குடிநீர் குடிக்க ஏற்ற நீர் அன்று ! அதன் நச்சு சிற்றுயிர்களை மட்டும் இன்றி நம் உடல் திசுக்களையும் சிதைத்து (கேன்சர்) நம்மை வாட்டும்.
- மருந்து நீர் (டானிக், சிரப்) என எதையும் பருக வேண்டாம். உணவே மருந்து. எதனை உணவாகக் கொள்ள இயலாதோ அதனை அருந்துவதும் உண்பதும் உடலுக்குத் தீங்காகும்.
- எந்த மாத்திரைகளையோ, மருந்துகளையோ விழுங்காதீர். அவையாவும் வேதியியல் நஞ்சுகள். உடலுக்கு ஊறு விளைவிப்பவையே.
- ஊசி மருந்தென எதையும் குத்திக் கொள்ளாதீர். அதன் நச்சு உடனேயோ அல்லது நாளடைவிலோ நம்மை நலிய வைத்துக் கொல்லும்.
- பனிக் கட்டி (ஐஸ் வாட்டர், ஐஸ் க்ரீம்) பொருட்களை உண்ணாதீர்கள். அவை நம் பற்களையும், உணவுக் குழாயையும் கெடுக்கும்.
- குறுகிய சமய, மொழி, இன, நாடு வெறி கொள்ளாதீர். அவை நம்மை பிணக்கில் வீழ்த்திப் பிணமாக்கும்.
- வீணே ஊர்திகளுக்குக் காத்திராதீர்கள் ! நடந்து செல்ல தக்க வாய்ப்புகளை வீணாக்காது, நடந்தே செல்லுங்கள். ஊர்திகளையே முழுதும் நம்பினால் கால்கள் வலுவிழக்கும். முடமாகும். நல்ல தரையில் வெறும் காலில் நடப்பதே சிறப்பு.
- எதையும் மிக அதிகமாக உண்ணாதீர் ! உண்டால் உடல் பருக்கும். மூளை சிறுக்கும். நோய் குடிபுகும்.
நல்லன ஓம்புமின்:
- தூய கனி காய்களையே (சமைக்காமல்) உணவாக உண்ணுங்கள். அவை கதிரவன் ஒளியில் விளைந்த நல்லமுது. அவை நம்மை நீடித்த நல்வாழ்வு வாழச் செய்யும். தேங்காயும், வாழைப் பழமும், மிகச் சிறந்த மனித உணவுகளாகும். இவை வாங்க இயலாதோர், தானியங்களையோ, பயறு வகைகளையோ நீரில் ஊற வைத்து உண்ணலாம். பச்சையாக உண்ணத் தக்க காய்கறி, கிழங்கு, கடலை வகைகளையும் உண்ணலாம்.
- இயற்கை உணவுகளுள், தேங்காய், பழங்கள் முதல் தரமானவை. ஊற வைத்த தானியங்கள், பயறுகள் இரண்டாம் தரமானவை. பச்சைக் காய்கறிகள், கீரைகள் மூன்றாம் தரமானவை. நிலத்திற்கு அடியில் விளையும் கிழங்குகள், வேர்க் கடலை போன்றவை நான்காம் தரமானவை.
- விலங்குகளின் பாலையோ, பால் பொருட்களையோ உண்ணாதிருப்பது நல்லது. உண்ணத்தான் வேண்டும் என்ற நிலையில் இருந்தால் பச்சைப் பாலில் உறை விட்டு பச்சை தயிராகவோ, மோராகவோ அருந்துவது குறைந்த தீமை பயப்பது.
- தேன் கூடப் பருகாமல் இருப்பதே நல்லது. உணவு உண்ண முடியாத நிலை, வயிற்றுப் புண் போன்ற நிலைகளில் தேன் பருகுவதால் பெருங்கேடு விளையாது.
- தூய இயற்கையான நீரையே வேண்டும் அளவுக்குப் பருக வேண்டும். அது நல்லமுதாய் அமைந்து நம்மை காக்கும்.
- நறுங்காற்றையே மூச்சாக இழுங்கள். சோலை நடுவே உலவும் நறுங்காற்று உயிர்வளி மிக்கது. நம்மை உயரிய உயிரோட்ட மிக்கவராக அது ஆக்கும்.
- கதிரவன் ஒளியில் பலகால் தோயுங்கள் ! அது நமக்கு உண்மையான ஆற்றலை அளிக்கும் ஒளி அமுதமாகும். நோய் நீக்கி, நம் தோலையும், உள்ளத்தையும் ஒளி பெறச் செய்யும். இயன்ற அளவு குறைவாக உடுத்தி காற்றும் ஒளியும் உடலில் உலவ விடுங்கள்.
- ஓலைக் கூரை வேய்ந்த மண் குடில்கலே ஏற்ற மிகு வாழ்வில்லங்கள். நச்சுக் கதிர்களைப் புகவிடாது, வெப்பமும் குளிரும் தாக்காவண்ணம் நம்மை நலமுடன் வாழச் செய்யும் இல்லம் அது.
- மர நிழலில் பல கால் உறைவீர் ! பகலில் உயிர்வளி நல்கும். கண்களுக்குப் பசுமையும், குளுமையும் வழங்கும் அமுத ஊற்றாம் மரங்களின் நிழலிலே இயன்ற அளவு உறைதல் நன்றாம்.
- இயற்கை வெளியில் இயன்ற வரை உலவுங்கள் . மிதியடி அணியாது வெறுங்காலுடன் நல்ல புல் வெளியிலே, சோலைப்புரத்தே, மலை சாரலிடத்தே, ஆற்றின் இடையே உலவுதல் நன்றாகும்.
- எளிய கதர் ஆடைகளையே அணியுங்கள். உடலெங்கும் தூய காற்று உலவ உடலும் உள்ளமும் ஏற்றம் பெறும்.
- தோட்டப் பணி புரிவீர். பயன் தரும் மரம், செடி, கொடிகளை வளர்ப்பது மிகவும் புனிதமான பணியாகும். உடலுக்கும், உள்ளத்துக்கும், உயர்ந்த மகிழ்வைத் தந்து உலகிற்கே நன்மை தருவது அப்பணியே !
- உண்ணா நோன்பு கொள்வீர் ! இயலும் போதெல்லாம் உண்ண நோன்பு அடிக்கடி கொள்ளுங்கள்.ஒரு நாளில் இருவேளை மட்டுமே உண்பது, ஒரு வேளை மட்டுமே உண்பது, ஒருவகைப் பழமே உண்பது, கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் முழுவதும் உண்ணாதிருப்பது போன்ற வகையில் நோன்புகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்த அளவு, உயரிய கனி உணவில் கூட்டிப் பழகுவது வாழ்வின் உயரிய நிலையை எளிதில் அடையலாம்.
- பேசா நோன்பு சிலகால் கொள்க ! பயனில் சொற்களை ஒருபோதும் பேசற்க ! பயனுடையவற்றையும் சுருங்கக் கூறி, அவனாக (கேட்பவருக்கு எளிமையாக) விளங்கச் செய்க. குறிப்பிட வேளையில் பேசா நோன்பு கொள்க.
- குளிர்ந்த நீரில் இருகால் நீராடுமின் ! தூய இயற்கையான நீரில் காலையும், மாலையும் இருகால் நீராடுக. முரட்டுத் துண்டினால் தேய்த்துக் குளிக்க ! எலுமிச்சம் பழச் சாறும் உடம்பைத் தூய்மைப்படுத்தும். தலையில் முடி வளர்வதையும், தாடி முதலாக உடம்பில் முடி வளர்வதையும் இயல்பாக வளர விடுதலே சிறப்பாகும்.
- கண்ட கண்ட இடத்தில் மலமோ, சிறுநீரோ கழிக்கக் கூடாது. குறிப்பிட்ட இடத்தில் மலம் கழித்த பின் அவற்றின் மீது மண் இட்டு மூடி இயற்கை எருவாக மாறச் செய்வீர். இதனால் உலகு தூய்மை பெறுவதோடு, நல்லுரம் பெற்று மரங்களும் செழிக்கும்.!
- ஆசனப் பயிற்சிகள் செய்வீர். யோகாசனப் பயிற்சிகள் நம் உடலின் உள் வெளி உறுப்புகளை உறுதிப் படுத்துவதோடு, நீடித்த நல்வாழ்விற்குத் துணையும் புரிகின்றன.
- மூச்சுப் பயிற்சிகள் புரிவீர் ! நறுங்காற்று உலவும் இடத்தே, நாடி சுத்தி, இரேசகம், பூரகம், கும்பகம் போலும் மூச்சு பயிற்சிகளை ஒழுங்குறச் செய்தால் ஒளி வாழ்வு காண்போம்.
- தியானம் பயில்வீர் ! மலர் இருக்கையில் இருந்து தூய இடத்தே உயர் சிந்தனையில் ஆழ்ந்து, உள்ள ஓர்மை நிலை அடைக. அதன் வழி உண்மை ஒளி பெறுங்கள்.
- நடந்தன குறிப்பீர் (நாட்குறிப்பு) ! நாளும் நீவிர் எண்ணியவற்றையும், செயல் பட்டவற்றையும், வரவு-செலவு போன்ற விவரங்களையும் உள்ளது உள்ளவாறே குறிப்பேட்டில் பதிவு செய்க. இப்பழக்கம், உங்கள் உண்மை நிலையினை உங்களுக்கு உணர்த்தி, குறைகளைச் சுட்டிக் காட்டி, நிறைகளை வளர்த்து, ஒளிமயமான உயர்வாழ்வு வாழத் துணை செய்யும்.
- நாளும் நல்லனவே எண்ணி நல்லன காண்பீர் ! யாரிடத்தும், எதனிடத்தும் உள்ள நல்லனவற்றை எல்லாம் கண்டு (அவற்றை) உங்கள் மயமாக்கி, வாழ்வில் உயர்வு காண்பீர்.
வேண்டுகோள்.
எல்லா நல்ல பழக்கங்களுக்கும் அடிப்படையாக விளங்குவது இயற்கை உணவு உண்ணும் பழக்கமே ! முயற்சியும் ஊக்கமும் உடைய யாரும், படிப்படியாகச் சமையல் உணவுப் பழக்கத்தை விடுத்து முற்றிலும் இயற்கை உணவிற்கு வரலாம்.
முதலில் எண்ணையில் பொறித்த, வறுத்த, சுட்ட பொருள்களை ஒதுக்குவது.
இரண்டாவதாக உப்பு இல்லாமல் உண்பது.
மூன்றாவதாக இரவில் நெல்பொரி, அவல் போன்றவற்றை உண்பது,
நான்காவதாக பழங்களை மட்டும் உண்பதுடன் காலை உணவைப் பழமாக மாற்றுவது.
இறுதியில் மதியமும் தேங்காய் பழமாக மாற்றி, இறுதியில் முழுவதும் இயற்கை உணவிற்கு வரலாம்.
முதலில் எத்துணை முறை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் இயற்கை உணவு உண்ணலாம் !
இதனால் நோயற்ற உடலும் உள்ளமும் வாய்க்கும். நீடித்த நல்வாழ்வு அமையும். நல்ல பழக்கங்கள் உண்டாகும், தீய பழக்கங்கள் தாமே நீங்கும். அறநூல்களில் கூறியாங்கு வாழத்தக்க திண்மையும், வன்மையும் வாய்க்கும். அவன் மனிதருள் தூயனாவான். உயிரினம் அனைத்தும் வாழ, கண்கண்ட இறையாக இலங்குவான். அவன் வாழ்வே வாழ்வு !
இத்தகு உயரிய வாழ்வு வாழத் துடிக்கும் எங்கள் உடன் பிறந்த நல்லோரே. உங்களுக்கு உற்றுழி உதவ, உலக நல்வாழ்வு இயக்கம் என்னும் ஓர் இயக்கத்தினை தவத் திரு. ம.கி.பாண்டுரங்கனார் அவர்கள் தொடங்கியுள்ளார்.
இந்த இயக்கத்தின் தலைமையகமாக உலக நல்வாழ்வு நிலையமும், அதன் ஆசிரமும் இயங்கி வருகிறது. இது நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருங்கே அத்திரி முனிவர் தவம் பயின்ற மலைச்சாரலிலே வற்றாத கருணை ஆற்றின் வடபால், முப்பத்து மூன்று ஏக்கர் நிலத்தின் நடுவே அமைந்த சோலையின் கண் விளங்குகிறது. இயற்கை உணவே உண்டு இயன்ற வரை முற்றிலும் இயற்கை வாழ்வு வாழ்வோர் இங்கு பயில்கின்றனர். யாருக்கும் சுமையாகாது, இத்தகு இயற்கை வாழ் நெறி நின்று, உலகத் தொண்டாற்ற விழையும் தவச் சீலர்களை உலக நல்வாழ்வு நிலையம் உடன் நாடுகின்றது.
குழந்தை நிலையில் இருந்தே, முற்றிலும் தூய கனி உணவு, யோகப் பயிற்சிகள் வழங்கி, அவர்களை உயரிய தவத் தொண்டர்களாக்கி, உலகெல்லாம் உயர் பணியாற்றச் செய்ய இந் நிலையம் முயன்று வருகிறது.
அறவோரே! அந்தணாளரே! அறிஞர்களே ! சிந்தனையாளர்களே ! சமயத் தலைவர்களே ! நாடாளும் தலைவர்களே !
இத்தகு உயர் பணியில் ஈடுபட்டு, உலக நல்வாழ்வு இயக்கத்தினராக நீங்களும் ஏன் செயல்படக்கூடாது?